ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயி. இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை அடைத்து பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் வயல்களில் நெல் அறுவடை பணி நடந்தது. அறுவடை முடிந்த பிறகு சிலர் வயலுக்கு தீ வைத்தனர். இரவில் இந்த தீ பரவி ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் பற்றியது.
ஆடுகளின் சத்தம் கேட்டு முத்துக்குமார் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் சிறிது நேரத்தில் குடில் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதில் சுமார் 40 செம்மறி ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்து ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டதால் முத்துக்குமார் குடும்பத்தினர் பெரும் சோகமடைந்தனர்.
