Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலூரில் விஜய் பரப்புரை 2வது முறையாக ரத்து

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக தலைவரும் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொடர்ச்சியாகத் திமுக மீதான விமர்சனத்தை வைப்பதை மட்டுமே அரசியலாக முன்னெடுத்து வருகிறார்கள். கட்சி தொடங்கியது முதலே திமுக அரசு தங்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், விஜயின் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்புவதை மட்டுமே முதன்மையான அரசியல் செயல்பாடாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எல்லா அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கும், திமுக அரசிடம் எந்த அதிகாரமும் இருக்காது; அப்போது எங்கள் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் வீதி வீதியாகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்வார் எனச் சொன்னார் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அவரின் கருத்தையே மற்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரதிபலித்தனர். இந்நிலையில், மார்ச் 30ம் தேதி பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பாதுகாப்பு சரியாக வழங்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்துப் பரப்புரையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு திரும்பினார்.

தொடர்ந்து, சென்னையில் தியாகராய நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்யத் தவெக சார்பில் 4 மணி நேரம் வழங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்தப் பகுதிகள் நெரிசலானவை என்பதால் காவல்துறை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்குவது போன்ற கால அளவில் அனுமதியளித்தும், தவெக தரப்பு தாங்கள் கேட்ட அளவு அனுமதி வழங்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து காவல்துறை மற்றும் திமுக மீது குற்றச்சாட்டுகளைக் கூறி அன்றைய தினப் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் மனுத் தாக்கல் செய்த விஜய், அங்கு மட்டும் பரப்புரை செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 8ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சாலைவலம் மற்றும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி கடலூரில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் கடலூர் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றுகிறது என்ற காரணத்தைக் கூறித் தவெக பரப்புரையை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போதிய அளவு கூட்டம் வராததால் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லத் தாமதம் செய்த விஜய், பரப்புரைக்கு அனுமதி கொடுத்த இடத்தை சரியான நேரத்தில் அடைய முடியாத நிலையில், சைக்கிள் ஓட்டியும் ரோட்ஷோ செய்தும் உரை நிகழ்த்தாமலேயே திரும்பினார்.

இந்த நிலையில், கடலூரில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று மீண்டும் கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, நிர்வாக ரீதியான காரணங்களுக்காக கடலூர் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், விஜய் தொடர்ந்து இரண்டு நாள்கள் பரப்புரைக்கு செல்வதில்லை என்பதால்தான் கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிது.

முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாள்தோறும் குறைந்தது 2 அல்லது மூன்று இடங்களில் பரப்புரை செய்துவரும் நிலையில், ஒவ்வொரு பிரசாரத்திற்கும் இடையே நாள் கணக்கில் விஜய் விடுமுறை எடுப்பதையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, அரசியல் வரலாற்றில் ஒரு நாள் பரப்புரை, ஒரு நாள் விடுமுறை என இருக்கும் முதல் அரசியல் தலைவர் விஜய்தான் என விமர்சித்து வருகிறார்கள்.

error: Content is protected !!