சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தியை ஆதரித்து கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கைபடி திமுக ஆட்சி அமைந்தவுடன் 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் செயல்படுத்தப்படும். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் சேர்ந்து கொண்டு திட்டமிட்டனர். ஆனால் ஒரு கோடியே 35 லட்சம் பெண்களுக்கு ஒரே நாள் இரவில் 5,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி பெண்கள் வாழ்க்கையை மலர செய்தவர் மு.க. ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாத தற்குறி என பாஜக அண்ணாமலை கூறினார். எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கிட்டு தொங்கலாம் என’ டி.டி.வி தினகரன் கூறினார். சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி தமிழக முதலமைச்சரானார். பதவிக்காக காலில் விழுந்தவர் எனக் கூறினால், ஆசீர்வாதமாக காலில் விழுந்ததாக அவர் கூறுகிறார். ஏன் இப்போது சசிகலாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கவில்லை. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயண திட்டங்களால் பெண்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த பெண்களின் வாக்கும் திமுக கூட்டணிக்கே விழுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
