அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.1,600 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்- தாதம்பாளையம் ஏரிக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பேட்டி.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் இளங்கோ சூடாமணி, நடந்தை, சின்னதாராபுரம் ஊராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து, பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீண்ட கால கோரிக்கையான தாதம்பாளையம் ஏரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை மீட்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதற்கு மாற்றாக சேலத்தில் 300 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏரிப் பகுதியில் உள்ள சில பட்டா நிலங்களையும் கையகப்படுத்தி, விரைவில் ஏரியைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி – அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இதற்காக ரூ.5,300 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு நீர் நிரப்பப்படும்.
முதற்கட்ட ஆய்வுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.விரைவில் அந்த பணிகள் துவங்கப்படும்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் இதுவரை ரூ.1,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதில் சுமார் 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
குறிப்பாக, கிராமப்புற சாலைகளுக்காக ரூ.250 கோடி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
