தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளராக வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று ஜெயங்கொண்டம் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில், 2 1/2 வயது சிறுமி முதல் பள்ளி மாணவி வரை, பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில் 62,000 குழந்தைகள் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு நாளைக்கு 35 குழந்தை குற்றம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் 25 பெண்கள் மீதான குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு, பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. எனவே 3 பெண்களைப் பெற்ற தகப்பனாக நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சி ஆளுமை இல்லாத ஆட்சி, திறமை இல்லாத ஆட்சி, அதன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விரட்டியுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், அமெரிக்காவில் உள்ள கஞ்சா, போதை பொருட்கள் தமிழ்நாட்டில் எளிமையாக கிடைக்கின்றது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவிகளின் பைகளில் கஞ்சா சாக்லேட்டுகளை எடுக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த விடியா திமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளது. எனவே உங்கள் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
மேலும் விவசாயியான எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கினார். இந்த மன்னிக்க முடியாத திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை கெடுத்துவிட்டார். எனவே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமா, கெடுத்த ஸ்டாலின் வேண்டுமா, என்று நீங்கள் முடிவு எடுங்கள். இந்த அரியலூர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பெண்கள், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் மாணவர்கள், பெங்களூர் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால், வேலையில்லை.
இந்த நிலையை அனுமதிக்க கூடாது. இந்த மண் சோழர்கள் ஆண்ட மண். இந்த மாவட்டத்தில் மூன்று போகம் விளைந்த மண், இன்று பாலைவனம் போல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கடந்தாண்டு மட்டும் கொள்ளிடம் ஆற்றில்150 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அரியலூரில் இந்த கொள்ளிடம் ஆற்று நீரை செம்பியன் மாதேவி ஏரி, சுத்தமல்லி ஏரி, கரைவெட்டி ஏரி, சோழகங்கம் என்ற பொன்னேரி ஆகியவற்றில் நிரப்பினால், இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவை, விவசாய முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் வாழக்கூடாது என்று திமுக சூழ்ச்சி செய்கிறது. இந்த திட்டத்திற்காக சோழ பாசன திட்டம் என்ற பெயரில், நாம் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைப்பயணம் செய்தோம். ஆனால் சிந்தனை இல்லாத இந்த தமிழக முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் பிரச்சனைகளை அறியாமல், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மாவட்டத்தில் எதற்கும் பயன்படாத ஒரு அமைச்சர் உள்ளார். அவர் பெயருக்கு தான் அமைச்சர். மின்சாரத் துறையும் அவரிடம் தான் இருந்தது. செந்தில் ரஜினி படக்காமெடி போல, இந்த துறைக்கு கையெழுத்தை, பத்து ரூபாய் பாட்டில் செந்தில் பாலாஜி தான் முடிவெடுத்துக் கூறுவார்.ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சமூக நீதி கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோழை தமிழக முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், இதை தமிழ்நாட்டில் நடத்த மாட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்தால், அனைத்து சமுதாய மக்களுக்கும், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் பட்டியல் இன மக்களுக்கும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
தற்பொழுது தேர்தல் நேரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொள்ளை அடித்த பணத்தை, திமுகவினர் எடுத்து வருவார்கள். ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 6 கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் தருகின்றார்கள் என்று கணக்கிட்டால், எவ்வளவு கொள்ளை அடித்து உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும். இந்த திருட்டு ஆட்சி மக்கள் விரோத ஆட்சி, சமூக விரோத ஆட்சியை விரட்டி அடிங்கள். கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, விவசாயி எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக நீங்கள் கொண்டு வந்தால், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் முன்னேற்றம், நல்ல திட்டங்கள் என தமிழ்நாடு வளர்ச்சி அடையும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் தற்பொழுது ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியும் மக்களிடம் நம்பிக்கைப் பெறவில்லை என்பதால், தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உள்ளே வந்து விடும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இது பொதுமக்களிடம் எடுபடவில்லை. இதையடுத்து தற்பொழுது திமுகவினர், 8000 ரூபாய் கூப்பன் என்று டூப்ளிகேட் கூப்பனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். இந்த கூப்பனை குப்பையில் தூக்கி எறியுங்கள். ஏமாந்து திமுகவுக்கு வாக்களித்து விடாதீர்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில், உங்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார். எனவே திமுகவுக்கு ஸ்சுவாக !! என்று கூறி குட்பை ஸ்டாலின் என்று திமுகவை விரட்டியுங்கள். திமுகவினர் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்களை ஒரு வாக்கு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிற்கு திமுக கூட்டணியில் மரியாதையும், இல்லை மானமும் இல்லை. இவர்களின் கூட்டணியால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. எனவே தமிழ்நாட்டை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
