கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல் பணியில் இருந்த போது குளித்தலை அருகே குமாரமங்கலம் சாலையில் திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தி உள்ளார். பயணிகள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். இருப்பினும் அவரால் உட்கார முடியாமல் அங்கிருந்து நகர்ந்து இன்ஜின் மேல் படுத்துள்ளார். மேலும் மாற்று ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்து போக்கு வண்டி மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோஜ் நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு

மாரடைப்பால் உயிரிழந்தார். பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டும் சக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
