ஜப்பானின் Iwate மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ வேகமாக பரவி Otsuchi நகரை நோக்கி பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 2500-க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கடந்த புதன்கிழமை எரிய துவங்கிய இந்த காட்டு தீ, பல இடங்களுக்கு பரவியதால் தீ-யை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாடு தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். இருப்பினும் தரை மற்றும் வான்வழி மூலம் கொளுந்து விட்டு எரியும் காட்டு தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 1100-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் 8 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
தீ தணியும் அறிகுறிகள் தென்படாததால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 முதல் இப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளன. Otsuchi-யில் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ காட்சிகள், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி காட்டு தீ தீப்பிழம்புகள் நெருங்குவதையும், அருகிலுள்ள காடுகளிலிருந்து அடர்த்தியான புகை சூழ்வதையும் காட்டுகின்றன. காட்டுத் தீயின் கோரமுகம் தீவிரமாக இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை.
அறிக்கைகளின்படி, ஜப்பானில் இந்த காட்டுத்தீயின் தீவிரத்திற்கு வறண்ட குளிர்கால நிலைமைகளே ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவாத்தே மாகாணத்தின் ஒஃபுனாட்டோ நகரில் ஏற்பட்ட தீ, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இருந்தது. தற்போது புதிதாக ஏற்படும் காட்டு தீ சார்ந்த விபத்துகளும் அதன் தீவிரத்திற்கு இணையாக உள்ளன. பலத்த காற்று தொடர்ந்து தீப்பிழம்புகளை அதிகப்படுத்தி வருவதால் தீயை அணைக்கும் பணிகள் மேலும் சவாலானதாக மாறியுள்ளன.
