புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.
மத்திய கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டு முதல் 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2026-27 கல்வி ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதாகவும், 3 மொழிகளில் இரு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்துப் பள்ளிகளும் 7 நாட்களுக்குள் 3வது இந்திய மொழி கற்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த 3வது மொழியை இறுதி செய்து, அந்தந்த மண்டல அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் 6-ஆம் வகுப்பில் ஒரு பள்ளியால் அறிமுகப்படுத்தப்படும் 3வது மொழியை மட்டுமே, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவு, புதுச்சேரி மாணவர்களிடையே குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாணவர்கள் தற்போது பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்கும் நிலையில், பிரெஞ்சு மற்றும் இந்தியை கூடுதலாக கற்று வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கையின்படி, 3 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு வெளிநாட்டு மொழியுடன் சேர்த்து 2 இந்திய மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும். புதிய மொழி கொள்கையின்படி ஒரு வெளிநாட்டு மொழிதான் கற்க வேண்டும் என்பதால், ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு மொழியை கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில்
குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்
மேலும் 3-வது மொழியாக வெளிநாட்டு மொழி ஒன்றை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.(english/french)
இது தொடர்பாக அனைத்து பள்ளிகளும் 7 நாட்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் சிபிஎஸ்இ உத்தரவு.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிரெஞ்சு மொழி இன்னமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு மொழி ஆசிரியர்களும் உள்ளனர்.
தற்போது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையால் பிரெஞ்சு மொழி கைவிடப்படும் நிலை உருவாகி இருப்பது பிரெஞ்சு மொழி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்கிற அச்சம் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரஞ்சு மொழி நீக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவித்துள்ளார். மும்மொழி கொள்கையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய கல்வித்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
