தஞ்சாவூர் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறார்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் அருகே மருங்குளம் கிராமத்தில் 2024, ஜூன் 24-ஆம் தேதி 10 வயதுடைய இரு சிறுவர்கள் வயலில் வாத்து மேய்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் சைல்டு லைன் பணியாளர் தியாகராஜன் புகார் அளித்தார். இதன்பேரில் அப்போதைய கோட்டாட்சியர் செ. இலக்கியா, கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனர்.
இதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லெட்சுமணசுவாமிக்காக (46), இரு சிறுவர்களும் வாத்து மேய்த்து வருவதும், இதற்காக சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் கொடுத்துள்ளதும், இதனால் இரு சிறுவர்களையும் லெட்சுமணசுவாமி கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வருவதும் தெரிய வந்தது.
இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, லெட்சுமணசுவாமியைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரபுராம் வழக்கை விசாரித்து லெட்சுமணசுவாமிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய வல்லம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், அரசு தரப்பு வழக்குரைஞர் சிவநந்த விஜயலெட்சுமி, காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் பாராட்டினார்.
