தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனிடையே, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேற்று சந்தித்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை முதல்-அமைச்சர் விஜய் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்-அமைச்சர் விஜய் இன்று சந்தித்தார். வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் அவரை சந்தித்தார்.
முதல்-அமைச்சர் விஜய்யை வாசலுக்கு சென்று வரவேற்ற திருமாவளவன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பின்னர், அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை முதல்-அமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்.
