நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில்

தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
