Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கியில் வேலை பார்க்க ஆசையா? SBI-யில் 7,150 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்கத் தயாரா நீங்க!

மெகா அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பம்பர் ஆஃபர்!

வங்கித் துறையில் தங்களது வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 7,150 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான 2026-27 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Advt No. CRPD/APPR/2026-27/07) வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 396 பணியிடங்களும், புதுச்சேரிக்கு 18 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி மற்றும் வயதுத் தகுதிகள்

இந்த எஸ்பிஐ அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது; விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்குள் தங்களது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 02.04.1998-க்கு முன்பாகவும் 01.04.2006-க்கு பின்பாகவும் பிறந்திருக்கக் கூடாது (இரு தேதிகளும் உட்பட). அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு

முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம்

எஸ்பிஐ அப்ரண்டிஸ் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 19 மே 2026

விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08 ஜூன் 2026

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் இடஒதுக்கீடு இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (General/OBC/EWS) ₹300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி (SC/ST/PwBD) விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு நடைபெறும் காலம்: ஆன்லைன் எழுத்துத் தேர்வு தற்காலிகமாக ஜூலை 2026-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை மற்றும் மாத உதவித்தொகை (Stipend) எவ்வளவு?

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Exam) மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் பொது விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், கணிதம் மற்றும் ரீசனிங் ஆகிய பகுதிகள் தலா 25 கேள்விகளுடன் இடம்பெறும். ஆங்கிலப் பகுதியைத் தவிர, மற்ற கேள்விகள் அனைத்தும் தமிழ் உட்பட 13 வட்டார மொழிகளிலும் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு 1/4 மதிப்பெண் மைனஸ் (Negative Marking) செய்யப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வருட காலத்திற்கு வங்கியியல் நடைமுறைகள் குறித்த நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஓராண்டு பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ₹15,000 உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். இது ஒரு நிரந்தர வங்கி வேலை அல்ல என்றாலும், நாட்டின் மிகப்பெரிய வங்கியில் பணிபுரிந்த அனுபவச் சான்றிதழ் எதிர்காலத்தில் வங்கித் துறை வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் பக்கபலமாக அமையும். தகுதியுள்ள நபர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஜூன் 8-க்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!