கரூர் கொளந்தாக்கவுண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, கோவில், மசூதி, தேவாலயம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 கடைகளை அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மதுபான கடைகள் அகற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியில் குடியிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாகவும்,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதால் டாஸ்மாக் மதுபான கடை எண் 4927 இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் , மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோருக்கு ஏற்கனவே கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 7 நாட்களுக்குள் இந்த மதுபான கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால், அதிகாரிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட 7 நாட்கள் கெடு முடிந்தும், மதுபான கடையை இடமாற்றம் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டாஸ்மார்க் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
