24 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய திருச்சி திருவானைக்காவல் கோவில் யானை அகிலா
திருச்சி திருவானைக்காவலில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான
ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவிலில் அகிலா என்கிற யானை கோவில் நிகழ்விற்காக ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2002ல் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது கோவில் பூஜைகள் மற்றும் கோவில் பணிக்காக திருவாணைக்காவல் கோவிலுக்கு

கொண்டு வரப்பட்டது. அந்த யானை அகிலாவிற்கு இன்று 24 வயதை அடைந்ததையடுத்து கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா

கொண்டாடப்பட்டது.
அதனை முன்னிட்டு கோவில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் அதிகாரிகள், யானைபாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு யானைக்கு பழங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த குழந்தைகள் உள்ளிட்ட பலர் யானைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். யானை அகிலா அதற்கு நன்றி

தெரிவிக்கும் விதமாக தன் தும்பிக்கை தூக்கி தலையை அசைத்தது. அங்கிருந்தவர்கள் அதை கண்டு மகிழ்ந்தனர்.
