தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு படிப்பு படித்து வருகிறார்.
இவரும், இதே கல்லூரியில் 4ம் ஆண்டு தீவிர சிகிச்சை செவிலியர் படிப்பில் படித்து வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், மாணவி தனது காதலைக் கைவிட்டு விடுவதாக கவினிடம் கூறினார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதையடுத்து மாணவியை கவின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட கவின் நாம் காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டினாராம்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவக்கல்லூரிக்கு அருகே பூக்கொல்லையில் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் நேற்று அதிகாலை விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி நேற்று மாலை உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கவினை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
