ஏசி காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள்
திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது நவ்ஷாத். சம்பவத்தன்று அவரது வீட்டில் ஏசி பயன்பாட்டிற்காக வைத்திருந்த காப்பர் வயர்களை மூன்று மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து முகமது நவ்ஷாத் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காப்பர் வயரை திருடிச் சென்ற மூன்று மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: வாலிபர் கைது
காமாட்சி விளக்கு, செப்பு பொருட்கள் கொள்ளை
திருச்சி உலகநாதபுரம் பெரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா (37). இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த காமாட்சி விளக்கு மற்றும் செப்பு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுதா கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த கோகுல் (23) மற்றும் சஞ்சய் கோகுல் (22) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கோகுலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் கோகுலை தேடி வருகின்றனர்.
திருவரங்கத்தில் பரிதாபம்: சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு
வீட்டில் மயங்கி கிடந்த பெண் மருத்துவமனையில் சாவு
திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவரது மனைவி அஞ்சம்மாள் (62) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், அவரது மகள் மாரியம்மாள் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அஞ்சம்மாள் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அஞ்சம்மாள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் நகை திருட முயன்ற பெண் கைது
கைப்பையில் இருந்த நகையை திருட முயன்ற போது சிக்கினார்
திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஹென்றியின் மனைவி பிரியங்கா (32). இவர் வேலை முடிந்து டவுன் பஸ்சில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேருந்து புத்தூர் பகுதியில் வந்தபோது, பிரியங்கா அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் அவரது கைப்பையை திருட முயன்றுள்ளார். அந்த பையில் அரை பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த பிரியங்கா உடனடியாக அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தின் மனைவி காளியம்மாள் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காளியம்மாளை கைது செய்தனர்.
