Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

90% அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள் ஆதவ் அர்ஜுனா !

தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் தவெக? அதிமுகவில் இருந்து தொடரும் முக்கிய இணைப்புகள்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்த நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

சென்னையின் பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். மேலும், அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

“எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் கட்சி தவெக தான்”

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “அதிமுக நிர்வாகிகளை நாங்கள் எந்தவித ஆஃபரும் கொடுத்து அழைக்கவில்லை. தவெக மட்டுமே தற்போது நம்பிக்கையான கட்சி என்று அவர்கள் கருதுகின்றனர்” என்றார். மேலும், “எம்.ஜி.ஆர் வழியில் நடக்கக்கூடிய ஒரே கட்சி தவெக தான்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசியபோது, “செங்கோட்டையன் போன்ற தலைவர்களுக்கு தலைவர் விஜய் அளிக்கும் மரியாதையை பார்த்து அதிமுக நிர்வாகிகள் தவெகவை நோக்கி வருகிறார்கள். 90 சதவீத அதிமுக தொண்டர்கள் மனதளவில் தவெகவில் சேர முடிவு செய்து விட்டனர்” என தெரிவித்தார்.

அதிமுக – திமுக மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

மேலும் தனது பேச்சில், “பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்த தோல்விகளையும் அதிமுக தொண்டர்கள் சகித்துக்கொண்டார்கள். ஆனால் திமுக – அதிமுக இணைந்து செய்த அரசியல் சூழ்ச்சிகளால் தான் அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை இழந்தனர்” என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.

அத்துடன், “தமிழகத்தில் கட்சி நிதி முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது” என்றும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் தவெக

தவெகவில் இதுவரை தனியான தொழிற்சங்க அமைப்பு இல்லாத நிலையில், தற்போது அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்ததன் மூலம் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவெகவின் அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் போட்டி மேலும் தீவிரமடையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!