Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் (50), கிறிஸ்துராஜ் (40) மற்றும் ஜான்கென்னடி (35) ஆகிய சகோதரர்கள். விவசாயிகளான இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே தகராறு நிலவி வந்தது. ​இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தம்பி ஜான்கென்னடி, தனக்குரிய சொத்து பங்குகளை உடனடியாகப் பிரித்துத் தருமாறு அண்ணன் ஸ்டீபன்ராஜிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், கடந்த மார்ச் மாதம் ஸ்டீபன்ராஜ் தனது தோட்டத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜான்கென்னடி அவரைப் பலத்த ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்டீபன்ராஜின் மனைவி இசபெல்லா அளித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலைக்குப் பின் தலைமறைவாக இருந்த ஜான்கென்னடியை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த ஜான்கென்னடி சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், சிறையிலிருந்து வந்த பிறகும் அவர் மாறவில்லை. தினந்தோறும் மது போதையில் ஸ்டீபன்ராஜின் வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினரைத் தொடர்ந்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். ​இதனால் அச்சமடைந்த ஸ்டீபன்ராஜின் மனைவி இசபெல்லா, திருச்சி மத்திய மண்டல ஐஜியிடம் இதுகுறித்து நேரில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஐஜி பாலகிருஷ்ணன், குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி மத்திய மண்டல ஐஜியின் உத்தரவின் பேரில், கல்லக்குடி போலீசார் நேற்று ஜான்கென்னடியை மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். ​அப்போது ஜான்கென்னடி, நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் தனது வீட்டிற்குச் சென்று மாற்றுத் துணிகளை எடுத்து வருவதாக உடன் வந்த இரண்டு காவலர்களிடம் கூறியுள்ளார். காவலர்களும் அவரது பேச்சை நம்பி பாதுகாப்புடன் ஆலப்பாக்கத்தில் உள்ள ஜான்கென்னடியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
​வீட்டிற்குள் சென்ற ஜான்கென்னடி, யாரும் எதிர்பாராத விதமாகத் தனது வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தினை எடுத்துத் திடீரெனக் குடித்தார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் ஒரு குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது, காவலர்களின் அஜாக்கிரதையால் கைதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சி மற்றும் லால்குடி சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!