வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (47). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றனர்.
இதில் அந்தோணிராஜ் உள்பட 6 பேர் சென்ற காரை உறவினர் சத்தியராஜ் ஓட்டினார். மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கடலி என்ற இடத்தில் சென்றபோது அந்தோணிராஜ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த அந்தோணிராஜ், அவருடைய மனைவி சங்கீதா (42), மகள் ஹரிணி (20), உறவினர்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான ஹரிணி 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
