திருவாரூர் அருகே கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் பாபு. இவருடைய மனைவி மாலிசா (52). இவர் கடந்த 27-ந் தேதி புலிவலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.68 ஆயிரத்தை எடுத்து கொண்டு திருவாரூர் சென்றுள்ளார். அங்கு கமலாலயம் மேல் கரையில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்தை கட்டை பையில் வைத்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக திருவாரூர் பழைய பஸ் நிலையம் வந்தார்.
அங்கு ஒரு தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஊருக்கு செல்ல டிக்கெட் எடுப்பதற்காக கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாலிசா இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
