மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள் தாங்களாகவே,

இணையதளம் (https://se.census.gov.in) வாயிலாக தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம். 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்கள், வீடுதேடிச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலர்களாகளாக 2 நகராட்சி ஆணையர்கள், 4 வட்டாட்சியர்கள், 2 பேரூராட்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் திட்டமிடல், வளவழங்கல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகளை வழங்கும் மிக முக்கியமான தேசிய பணியாகும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி துல்லியமான மற்றும் தரமான தகவல்களை சேகரிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்பட உள்ளதையும், தரவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதால் அலுவலர்கள் பயிற்சியில் கற்பிக்கப்படும் செயல்முறைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவு சேகரிப்பு முறைகள், மொபைல் செயலி பயன்பாடு, கணக்கெடுப்பு பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் களப்பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலர்களால் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக துணை இயக்குநர் வசந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சித்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.பிரேமி (அரியலூர்), மனோகரன் (உடையார்பாளையம்) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் லோகநாதன், உதவி இயக்குநர்(ஊராட்சி/தணிக்கை), தனி வட்டாட்சியர்(தேர்தல்கள்), நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
