Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம்.

வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மத்திய மோடி அரசின் போக்கைக் கண்டித்தும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இன்று கண்டன

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, ஆட்டோ ஒன்றிற்கு கயிறு கட்டி, தேரை வடம் பிடித்து இழுப்பது போல சாலையில் இழுத்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிவா, ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாநில துணை செயலாளர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:–

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை படிப்படியாக 10 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகச் சமையல் சிலிண்டராக இருந்தாலும், வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டராக இருந்தாலும் கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ளன. இந்த விலை உயர்வு என்பது பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்கு ஒரு அடையாளமாகும்.

அயலுறவுக் கொள்கையில், ஒரு பொறுப்பான பாரம்பரிய மரபுகளில் நின்று ஏகாதிபத்தியச் சதிகளை முறியடிக்கக்கூடிய முறையில் இந்தியா தன் அணுகுமுறையை வகுத்திருந்தால், இந்த விலை உயர்வுச் சுமையை மக்கள் தலையில் சுமத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அமெரிக்காவிற்குச் சார்பான நிலையை எடுத்த காரணத்தால், அமெரிக்காவும் இந்தியாவைத் தாக்குகிறது; பல்வேறு நாடுகளில் இருந்தும் நமக்கு நெருக்கடிகள் வருகின்றன. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கும் சிக்கலுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே காரணம். அவர்களின் யுத்த வெறிக்குச் சார்பாக நின்ற இந்திய அரசின் மென்மைப் போக்குதான் இதற்கு அடிப்படைப் பின்னணியாகும்.

இன்றைக்கு மக்களிடம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட உழைப்பை அட்டைப் பூச்சி போல் உறிஞ்சிச் சுரண்டும் இந்த பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு என்பது பகல் கொள்ளைக்குச் சமமானது. நாட்டு மக்களிடம் சட்டப்பூர்வமாகக் கொள்ளையடிக்கும் இந்த விலை உயர்வைத் தடுப்பதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அரசு அதுகுறித்து யோசிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எண்ணெய் தொகுப்பு நிதி என்று ஒரு நிதியை உருவாக்கி, இதுபோன்ற விலை உயர்வு காலங்களில் அதனைப் பயன்படுத்தி சமாளிப்பார்கள். அந்த அடிப்படையான ஆதார அமைப்பையே வாஜ்பாய் அரசு நீக்கியது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தாக்குதலை மோடி அரசு நடத்தி வருகிறது.

அடிப்படை வெளியுறவுக் கொள்கையிலும், பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

ஈரான் மற்றும் ஈராக்கில் தாக்குதல் நடத்தியது யார்? அமெரிக்கா தான். அமெரிக்காவின் அந்த ஏகாதிபத்திய யுத்த வெறிக்கு யார் துணையாகப் போனார்கள்? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். எனவே, இந்த அரசின் தவறான கொள்கைதான் நம்மை இந்த நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள் என்றார்.

error: Content is protected !!