Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அறிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, கடந்த மாதம் (மே) 4ம் தேதி முடிவுகள் வெளியானது. அதில் தவெக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10ம் தேதி முதல்வராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த 21 மற்றும் 22ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, 21 தவெக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர், விசிக ஒருவர், ஐயூஎம்எல் கட்சியில் ஒரு அமைச்சரும் பதவியேற்றனர்.

அதன்படி, தற்போது விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி 30 நிமிட நேரம் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

அதன்படி, பட்ஜெட் கூட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், விஜய் முதல்வராக பதவியேற்ற உடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார். தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடுவது, சிங்கப்பெண் திட்டம் ஆகியவை ஆகும். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் அறிவிப்பை விவசாயிகள் ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்து, மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்துவது சாத்தியமா? இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட முடியுமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், பெண்களுக்கு தமிழகம் முழுதும் இலவச பேருந்து பயணம், ஆண்டுக்கு 6 சிலிண்டர், ஒரு பவுன் தங்கம், தாய்மாமன் சீர் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிவிப்புகளில், ஏதாவது சிலவற்றை நிறைவேற்ற முடியுமா? தமிழகத்தின் நிதி நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சமீபகாலமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இரவு நேரம் ஏற்படும் மின்வெட்டு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டது, அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட தாமதம் ஏன் என்பது குறித்தும் முதல்வர் விஜய் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மக்கள் விரும்பும் தூய ஆட்சி கொடுக்க அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!