Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்

 தமிழகத்தில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்குத் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சாதாரண, வியாபாரம் ஆகாத கடைகளை மூடிவிட்டு கணக்குக் காட்டுவதைப் போல இல்லாமல், தினசரி லட்சக்கணக்கில் கல்லா கட்டும் கடைகளையும் மக்கள் நலனுக்காக மூடியுள்ளதாக அமைச்சர் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ் ” நாங்கள் சும்மா கணக்குக் காட்டுவதற்காக ஊருக்கு வெளியே இருக்கும் கடைகளையோ, பார் (Bar) வசதி இல்லாத கடைகளையோ மூடவில்லை. ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் வரை மிக பிரம்மாண்டமாக வியாபாரம் ஆகும் கடைகளில் இருந்து, குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டும் கடைகள் வரை, எவை மக்களுக்கு இடையூறாக இருந்ததோ அவை அனைத்தையும் லிஸ்ட் எடுத்து மூடியிருக்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அரசு மருத்துவமனைகள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் முந்தைய ஆட்சியில் இந்தக் கடைகளுக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிகாரிகளுக்கு இது தவறு என்று தெரிந்தும் அனுமதி அளித்தது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, தண்டனைக்குரியது” என தெரிவித்தார்.

பெரிய கடைகளை மூடியதால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியையும் அமைச்சர் மறைக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “இவ்வளவு பெரிய கடைகளை உடனடியாக மூடியதால் அரசுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 8,000 கோடி முதல் 11,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு (Revenue Loss) ஏற்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்த நிதியிழப்பைச் சரிசெய்ய, அரசாங்கத்தின் மற்ற துறைகள் (பதிவுத்துறை, வணிகவரித்துறை போன்றவை) மூலம் வருமானத்தைப் பெருக்க மிக வேகமாக வேலை பார்த்து வருகிறோம். அந்தத் துறைகளில் வருமானம் சீரானவுடன், அடுத்த கட்டமாக இன்னும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அனைத்தும் இதே முறையில் அதிரடியாக மூடப்படும். மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” எனவும் அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ‘பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும்’ முறைகேட்டிற்கும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாட்டிலுக்கு மேல் வாங்கும் அந்த 10 ரூபாய் அரசோட கஜானாவுக்குப் போவதில்லை, அது தனிநபர்களின் பாக்கெட்டுக்குச் செல்கிறது.

டெபாசிட் ஸ்டிக்கர் (Deposit Sticker) ஒட்டப்பட்டிருந்தாலும் அது MRP விலைக்குள் வராமல் ஏமாற்றுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒட்டுமொத்த துறையும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும். முதற்கட்டமாக அரசுக்கு வர வேண்டிய வருமானம் முழுமையாக அரசிடமே சேர அனைத்து ஸ்டெப்களையும் எடுத்து வருகிறோம்.” எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!