தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளம் ரோட்டைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டை, அவரது சகோதரரான செந்தில்குமார் என்பவர் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த அறைகளை தூர்வாரி தேடிய திருடர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் வேறு முக்கியமான நகைகளோ அல்லது ரொக்கப் பணமோ இல்லாததால் வேறு பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்துள்ளது.
இதேபோன்று கதிரேசனின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வரும் விவசாயியான ஈஸ்வரவேல்(56) என்பவரது வீட்டின் பூட்டையும் அதே மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். ஈஸ்வரவேல் அதே பகுதியில் உள்ள மற்றொரு மாற்று வீட்டில் வசித்து வருவதால், இந்த வீட்டில் வழக்கமாக ஆள் யாரும் இருப்பதில்லை. இதனை துல்லியமாக தெரிந்துகொண்டே திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். எனினும் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்ட இந்தத் தொடர் திருட்டு முயற்சி குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார், இன்று சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது உடனடியாக தெரியவராததால், தோப்புவளம் ரோடு மற்றும் வீடுகளின் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை சாத்தான்குளம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
