தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகை சமந்தா, இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இச்சந்திப்பு குறித்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, “விஜய் சார் திரையில் வெறும் கதாநாயகனாக இருப்பதற்காகப் பிறந்தவர் அல்ல; அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காகப் பிறந்தவர் என்பதை மக்கள் அவர் மீது காட்டும் வரவேற்பு உணர்த்துகிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்கள் நிறைந்த புதிய களத்தில் அடியெடுத்து வைத்துள்ள அவரது துணிச்சல் என்னை ஊக்குவிக்கிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, மாறாக அவர் அதை அணுகும் நோக்கத்தால் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விடப் பெரிய அளவில் ஆச்சரியப்படுத்துவார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
