சட்டமன்ற நிகழ்வுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நேரலை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் ஒரு கட்சியை பற்றி துதி பாடுகிறார்கள், தலைவரைப் பற்றி துதி பாடுகிறார்கள். உங்கள் பெருமையை பேசுவதற்காகவா சட்டமன்றம்? பேச வேண்டிய விவகாரம் குறித்து பேசாமல் பேரவை திசை மாறி பயணிக்கிறது. இது வேதனை அளிக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நேரலை செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவை கூட்டத்தை மக்களை பார்க்கவிடாமல் தடுப்பது சரியா? சுதந்திரம் பெற்றது முதல் காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பேசிக்கொண்டே இருக்கிறோம்.
நமது உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதற்காக போராடியுள்ளனர். தாய்ப்பால் போல தண்ணீர் முக்கியமானது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைக்காக ஒன்றாக நிற்போம். எப்படி மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கினோமோ, அதேபோல் நீர் மிகை மேலாண்மை மாநிலமாக உருவாக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரிடம் நமது முதலமைச்சர் விஜய் பேச வேண்டும். சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை என எதற்கும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்பட்டதில்லை” என்றார்.
