தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தில் உள்ள மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு கிராமத்தில் ஓடும் மகாராஜ சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டு தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நான்கு புறமும் காட்டாறுகளால் சூழப்பட்டுள்ளது. இந்தக் காட்டாறுகளின் நீர் பிடி பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி, கால்நடைகள் நம்பி வாழ்க்கை நடத்தும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் அதன் பராமரிப்பிற்கும், விவசாய பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் தடுப்பணைகள் மிக அவசியம் என்று பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
குறிப்பாக இந்த மாளியக்காடு பகுதியில் ஓடும் காட்டாற்றின் இரு கரைகளிலும் பல்வேறு கிராமங்கள் இருப்பதாலும், இந்த காட்டாற்றினில் நீரை நம்பி 700 ஹெக்டர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெறுவதாலும், இந்த காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைத்து தர வேண்டி, பட்டுக்கோட்டை எம்எல்ஏ உள்பட பல்வேறு நிலை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை என்று அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தங்கள் வாக்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களின் வாழ்வாதாரத்திற்கு இதுவரை ஆண்ட அரசுகள் கொடுக்கவில்லை என்றும், கிராம மக்களாக ஒன்று கூடி நிதி திரட்டி, குறுக்கே சிமெண்ட் குழாய் பொருத்தி மண் பாலங்கள் அமைத்து பயன்படுத்தி வருவதாகவும், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அந்த மண்பாலங்கள் காட்டாற்று நீரில் அடித்து செல்லப்பட்டு மறுபடி மறுபடி தங்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் போட்டு பாலங்கள் கட்டி வருவதாகவும்,
இந்த காட்டாற்றின் மீது பாலம் கட்டிக் கொடுத்தால் மாளியாக்காடு,
சேண்டாக்கோட்டை, காசாங்காடு
தொக்காளிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் விவசாய பயன்பாடு மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என்பதாலும், இந்த தற்காலிக மண் பாலத்தின் வழியாகவே அந்தப் பகுதியின் புகழ்பெற்ற கதிராலம்மன் கோவிலுக்கும் சென்று வர வேண்டி உள்ளதால், அந்தப் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, தற்பொழுது பொறுப்பெற்றுள்ள புதிய அரசாவது தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
