நீலகிரி மாவட்டத்தில் 65% வனப்பகுதி உள்ள நிலையில், சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீருக்காகச் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் கூடலூர் மற்றும் ஊட்டியில் மனிதர்களைச் சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்களைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேத்தி பகுதியிலும் ஒரு வளர்ப்பு நாய் வேட்டையாடப்பட்டது.
இந்நிலையில், ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை ஒன்று, வீட்டின் வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த வளர்ப்பு நாயை பாய்ந்து கழுத்தைக் கவ்வி கொடூரமாக வேட்டையாடியுள்ளது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமப்புறங்களைத் தாண்டி தற்போது நகர்ப்புறங்களிலும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் எச்சரித்துள்ளனர்.
