இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலங்களும் போட்டிபோடுகின்றன. பெரு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தேவையான உதவிகளை செய்து வரவேற்கின்றன. அந்த வகையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது புதிய உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக தென்மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவும் மல்லுக்கட்டி வருகின்றன. பஜாஜ் நிறுவனத்துக்கு மராட்டிய அரசிடம் இருந்து வரவேண்டிய மின்சார வாகனங்களுக்கான மானியத்தொகை (எப்.ஏ.எம்.இ. மற்றும் மாநில மானியங்கள்) ரூ.70 கோடிக்கு மேல் கிடைக்காமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதி சார்ந்த இழுபறி காரணமாக பஜாஜ் நிறுவனம் தனது அடுத்த கட்ட விரிவாக்கத்தை மராட்டியத்துக்கு வெளியே கொண்டு செல்ல தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த ஆலோசனையின்படி, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பஜாஜ் நிறுவன முதலீடுபஜாஜ் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களான ‘சேத்தக்’ மாடல்களுக்கான தேவை சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தி திறனை விரிவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டிருப்பது இந்த புதிய பாதைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாடு, தெலுங்கானா இரு மாநிலங்களுமே பஜாஜ் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட முதலீட்டை ஈர்ப்பதற்கு தங்கள் தரப்பு சாதகமான சூழலை முன்வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வலுவான ஆட்டோமொபைல் சுற்றுச்சூழல் மற்றும் முதிர்ச்சி அடைந்த ‘சப்ளை செயின்’ இருப்பதால் போட்டியில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கொள்கை ஆதரவு மூலம் வளர்ந்துவரும் தெலுங்கானா மாநிலமும், பஜாஜ் நிறுவனத்தை ஈர்க்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நில வசதிகளை செய்துதர முன்வந்திருக்கிறது. யார் பக்கம் போகப்போகிறது?இந்த ஆலை அமைக்கப்பட்டால், இது தென்இந்தியாவில் அமைய இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதலாவது உற்பத்தி ஆலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பஜாஜ் நிறுவனம் இரு மாநிலங்களின் சலுகைகளையும், தளங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும், யார் பக்கம் போகலாம் என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் எட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பஜாஜ் ஆட்டோ முதலீடு முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்ப டாத முதலீடு திட்டம் என்றும், அவ்வாறு தமிழகத்தில் பஜாஜ் நிறுவனம் கால் தடம் பதித்தால், அந்த பெருமை தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் த.வெ.க. அரசுக்கே சேரும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
