தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய உதயநிதி, இன்னைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த சோபா மாடல் ஆட்சியுடைய போலி பிம்பம் கடந்த ஒரு மாசத்துல அடிச்சு, துவைக்கப்பட்டு, நொறுங்கி கிடக்கின்றது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியுடைய அவலங்கள் எல்லாம் மக்கள் புரிஞ்சுக்கிட்டு இருக்குறாங்க. இன்னைக்கு இந்த அரசுடைய தவறுகளை, சறுக்கல்களை எல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தட்டிக்கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா அப்படி தட்டிக்கேட்கிற இளைஞர்களை, நம்முடைய கழகத்தினரை கைது செய்யுற வேலையை இன்னைக்கு இந்த சோபா மாடல் அரசு இன்னைக்கு ஆரம்பிச்சிருக்காங்க. ஆகவே, இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ள நிச்சயம் நமக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவை. அந்த வகையிலே இந்த மேடையிலே நமக்கு இரண்டு வழக்கறிஞர்கள், அதுவும் ஜோடியான வழக்கறிஞர்கள் நம்முடைய இயக்கத்திற்கு கிடைச்சிருக்காங்க.
தூய சக்தி, தூய சக்தினு சொன்னவங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன பண்ணாங்கன்னு நீங்க அத்தனை பேரும் தொலைக்காட்சில பார்த்திருப்பீங்க. ஆட்சிக்கு வந்த அஞ்சாவது நிமிஷமே குதிரை பேரத்தை ஆரம்பிச்சாங்க. பிற கட்சிகளுக்கு முதல்ல சோபா போகும். சோபாவிற்கு பின்னாடியே நம்முடைய முதலமைச்சர் துரத்திக்கிட்டே போவார், சோபாவை துரத்திக்கிட்டே போவார். அப்புறம் முதலமைச்சர் பின்னாலேயே அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்துடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜினாமா கடிதத்தோடு அவங்களும் கியூல (Queue) வர்றதெல்லாம் பார்த்துகிட்டு இருக்கிறோம். இன்னைக்கு இந்த காட்சிதான் தமிழ்நாட்டுல ஒரு மாசமாக ரிப்பீட் மோடுல (Repeat mode) தினமும் இது ஒரு செய்தியாக வந்துகிட்டு இருக்கிறது.
அதுமட்டும் இல்ல, இன்னைக்கு தமிழ்நாட்டுல எங்க பார்த்தாலும் மின்வெட்டு, கரண்ட் கட்டுதான் (Current cut). எனக்கு என்ன ஆச்சரியம்னா, இந்த நேரம் வரைக்கும் இந்த மண்டபத்துல கரண்ட் கட் ஆகாம இருக்கு. ஜெனரேட்டர்ல (Generator) ஓடிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். அதுவும் குறிப்பா இந்த ஒரத்தநாடு பகுதில பல கிராமங்கள்ல நள்ளிரவுகள்ல பவர் கட் (Power cut) ஆயிட்டு இருக்கு. அது தொடர்கதையாக வந்துகிட்டு இருக்கு. விவசாயிகள் இன்னைக்கு இதனால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க.
நம்முடைய தலைவர் முதலமைச்சரா இருந்தப்போ 2021-ஆம் ஆண்டுல இருந்து 2025-ஆம் ஆண்டு வரைக்கும் சரியா ஜூன் 12-ஆம் தேதி அன்னைக்கு மேட்டூர்ல அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். ஆனா இந்த அரசு, இந்த மேட்டூர் அணையை ஜூன் 12-ஆம் தேதி இன்னும் திறக்கல. அதுமட்டும் இல்ல, குறுவை சாகுபடிக்கு அவங்க அறிவிச்ச ஸ்பெஷல் பேக்கேஜ் (Special package) பத்தாதுன்னு இன்னைக்கு விவசாயிகள் அத்தனை பேரும் சாலைகள்ல வந்து போராடிட்டு இருக்காங்க. இதை சட்டமன்றத்துல சொன்னவுடனே முதலமைச்சர் என்ன சொன்னாரு? திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தூண்டுதலால விவசாயிகள் போராட்டத்துக்கு வந்திருக்காங்க அப்படின்னு, விவசாயிகளுடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இங்க இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
தேர்தல் அப்போ, 5 ஏக்கர் வரைக்கும் பயிர் கடன் தள்ளுபடின்னு தேர்தல் பிரச்சாரத்துல வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனா அதெல்லாம் செஞ்சாரா அப்படிங்கறதை நீங்க யோசிச்சு பாக்கணும். முதல்ல 1 லட்சம் வரைக்கும் பயிர் கடன் வாங்கியிருந்தா, வெறும் 5000 ரூபாய் தள்ளுபடி அப்படின்னு அறிவிச்சாங்க. அதுலயும் பார்த்தீங்கன்னா சிறு விவசாயி, குறு விவசாயினு தரம் பிரிச்சாங்க. அதன்பிறகு 75,000 வரைக்கும் தள்ளுபடின்னு சொன்னாங்க. அதுலயும் இப்போ ஒரே வீட்டுல ரெண்டு பேர், மூணு பேர் கடன் வாங்கியிருந்தாலோ, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பென்ஷன் (Pension) வாங்குறவங்க இருந்தாலோ, அவங்களுக்கெல்லாம் பயிர் கடன் தள்ளுபடி இல்லைங்கறதையும் அறிவிச்சிருக்காங்க.
இது எல்லாத்தையும் விட மிகப்பெரிய ஒரு கொடுமை சட்டமன்ற ஒழுங்கு சீர்குலையுது. இன்னைக்கு தமிழ்நாட்டுடைய சட்டமன்ற ஒழுங்கு எந்த அளவுல இருக்குன்னு உங்களுக்கு தெரியும். ஒரு அதலபாதாளத்துல, படுகுழியில இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்காங்க. இதையெல்லாம் கழகம் சார்பாக சட்டமன்றத்துல நாங்க எல்லாம் பேசினோம். ஆனா அதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய முதலமைச்சர், அதற்கெல்லாம் பதில் சொன்னாரா முதலமைச்சர். ஆளுங்கட்சியினர் சட்டசபையில என்னென்ன கூத்தடிச்சாங்கன்னு நீங்க அத்தனை பேரும் தொலைக்காட்சியில பார்த்திருப்பீங்க.
எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா (Cinema theater)? இல்ல ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு (Shooting spot) வந்துட்டோமான்னு கேக்குற அளவுக்கு, இன்னைக்கு சட்டமன்றத்துடைய தரத்தையே நம்முடைய ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனா எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் அப்படிங்கறதை ரெடிமேட் (Readymade) பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைச்சிருக்காங்க. நம்முடைய தலைவர் செஞ்ச பணிகளால நல்லது நடந்தா, அதற்கும் சேர்ந்து இந்த ஆட்சியாளர்கள் இன்னைக்கு ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்காங்க. அதுவே ஏதாவது பிரச்சனைன்னா திமுகதான் காரணம் அப்படிங்கிற ரெடிமேட் பதிலையும் கொடுத்துட்டு இருக்காங்க.
அதுமட்டும் இல்ல, நம்முடைய தலைவரை சிறுமைப்படுத்துறோம் அப்படிங்கிற நோக்கதோடு, நம்முடைய தலைவரை முதலமைச்சர் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் சட்டமன்றத்துல பேசினார். நம்ம தலைவர் என்னைக்கும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்துல இருந்து நம்முடைய தலைவர் இருந்ததே கிடையாது. மிசா (MISA) டைம்ல தலைவரை தேடி போலீஸ் கோபாலபுரம் இல்லத்திற்கு அவரை கைது செய்வதற்கு வந்தாங்க. அப்போ கலைஞர் அவர்கள் சொன்ன பதில், “என்னுடைய மகன் கழக நிகழ்ச்சிக்காக வெளியூர் போயிருக்காரு, வந்ததும் நானே உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னவர்தான் டாக்டர் கலைஞர் அவர்கள். கலைஞர் சொன்னபடி கழகப்பணி முடிஞ்சு வந்த நம்முடைய தலைவரை உடனடியாக காவல் நிலையத்திற்கு அனுப்பி வைச்சார்.
இன்னைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக, நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக, இன்னைக்கு எங்களுடைய தலைவர், நம்முடைய தலைவர் தமிழ்நாடு முழுக்க இருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கிறார். நம்முடைய தலைவர் அவர்கள். தினமும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் அவர்கள். மக்களுடைய இதயங்கள்ல இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் அவர்கள்.
ஆனா அதே நேரத்துல, சென்னையில இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சருடைய தொகுதி, பெரம்பூர் தொகுதி மக்கள் என்ன தெரியுமா சொல்றாங்க? “நாங்கெல்லாம் தெரியாம ஒருத்தரை தெரியாத்தனமா ஜெயிக்க வைச்சிட்டோமே, அவர் எங்க போனார்? யாராவது பார்த்தீங்களா?” என்று கேக்குற அளவுக்கு இன்னைக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் புலம்பிட்டு இருக்காங்க. இந்த ஆட்சியில ஒட்டுமொத்த தமிழ்நாடும் யாரைத் தேடிட்டு இருக்கு? மின்சாரத்தைத் தேடிட்டு இருக்கு. போன அஞ்சு வருஷம் நல்லா இருந்த சட்டமன்ற ஒழுங்க இன்னைக்கு மக்கள் தேடிட்டு இருக்காங்க. ஆகவே, கிண்டல் பண்றதா நினைச்சு முதலமைச்சர், அவரை அவரே இன்னைக்கு எக்ஸ்போஸ் (Expose) பண்ண ஆரம்பிச்சிருக்காரு. இன்னும் அவர் சட்டமன்றத்துல டான்ஸ் (Dance) மட்டும்தான் ஆடல. அடுத்த கூட்டத்தொடர்ல நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் (Dance performance) இருக்கும்கிறது எங்களுடைய எதிர்பார்ப்பு.
ஆகவே, இன்னைக்கு தமிழ்நாடு இவ்வளவு பெரிய ஒரு பேரிடர்ல மாட்டிக்கிட்டு இருக்கு. இந்த பேரிடர்ல இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு, உடன்பிறப்புகளாகிய நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் வருங்காலத்துல ஒற்றுமையோடு உழைக்க வேண்டும். நாம பார்க்காத வெற்றியும் கிடையாது, நாம பார்க்காத தோல்வியும் கிடையாது. கட்சியையும் தலைவரையும் மனசுல வைச்சு, நம்முடைய பணிகளை எல்லாம் நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.
