தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி
திருச்சி மணச்சநல்லூர் எடுமலை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 76) இவர் சைக்கிளில் வெள்ளக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த ஒரு தனியார் நிறுவன பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமசாமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர் அங்கே டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது பற்றி அவரது மகன் செல்வகுமார் புலிவலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
துறையூர் அருகே மது குடிக்க தந்தை முட்டுக்கட்டை- வாலிபர் தற்கொலை
திருச்சி துறையூர் நட்ட வேலம்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் இவரது மகன் சதீஷ்குமார் ( 26). குடிப்பழக்கத்திற்கு ஆளான இந்த வாலிபர் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மகனின் எதிர்காலத்தை எண்ணி வருந்திய அவரது தந்தை வரதராஜ் தினமும் மது அருந்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான சதீஷ்குமார் கடந்த 20ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் பின்னர் பெற்றோர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ வாங்க பெற்றோர் பணம் தராததால் வாலிபர் தற்கொலை
திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் இவரது மகன் சுரேஷ் (வயது 37). திருமணமாகவில்லை மதுவுக்கு அடிமையான இவர் அடிக்கடி மது குடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார் . இந்த நிலையில் தனது தாயார் ஹேமலதா விடம் ஆட்டோ வாங்க பணம் கேட்டார். ஆனால் தாயார் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் யாரும் எதிர்பாராத வகையில் தனது தாயின் சேலையில் தூக்கு போட்டு தொங்கினார் உடனே பெற்றோர் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி சாவு
திருச்சி லால்குடி மேட்டுப்பட்டி தேவாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் நேசன் (வயது 15) மேப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்தார்.
நேற்று அவரது தாய் தந்தை இருவரும் உறவினர் இல்ல காதுகுத்து விசேஷத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த நேசன் சக நண்பர்களுடன் வெள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றுக்கு குளிக்க சென்றனர்.
பின்னர் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது நேசன் தவறி கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேசனுக்கு சரியாக நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிராம மக்கள் கிணற்றுக்குள் இறங்கி நேசனை பிணமாக மீட்டு இலால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
