தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள ‘ஜான் சா மில்’ என்ற தனியார் மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 400 டன் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த ஆலையின் வளாகத்தில் மொத்தம் 2 லட்சம் டன் அளவிலான மரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ வேகமாகப் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்கும் பணியில் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி அனல்மின் நிலைய வாகனம், வ.உ.சி. துறைமுக தீயணைப்பு வாகனம் மற்றும் ஸ்பிக் தனியார் நிறுவன தீயணைப்பு வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தீவிரமாகப் போராடினர். இந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் தூத்துக்குடி மாவட்ட உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய உதவி அலுவலர் கோமதி அமுதா, சிப்காட் நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவனக்கட்டி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர். இந்த விபத்தில் வளாகத்தில் இருந்த 400 டன் மரங்கள் முழுமையாக எரிந்துள்ளதால், சேத மதிப்பு பல கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
