Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்…லேட் நைட்டில் காரசார வாதம்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்...லேட் நைட்டில் காரசார வாதம்

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு மேஜிஸ்டிரேட்டிடம் இருந்து திமுக தரப்பு ஜாமீன் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

திமுக ஆளுங்கட்சியாக இருந்ததை காட்டிலும் எதிர்க்கட்சியாக தான் சிறப்பாக களம் கண்டிருக்கிறது என்று மூத்த தலைவர்கள் பலர் முன்வைப்பதை பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வியூகங்களை முன்னெடுத்தனர். ஒருபுறம் ஆளுங்கட்சியின் குறைகளை விமர்சிப்பது, மறுபுறம் கட்சியினரின் உற்சாகம் குறையாமல் உத்வேகப்படுத்தி கொண்டே இருப்பது.

1977ல் எம். ஜி. ஆர் ஆட்சியை பிடித்த பின்னர், 12 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா ஆட்சியை பிடித்ததும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இந்த காலகட்டங்களில் கட்சியினர் மீது பாயும் வழக்குகளை திறம்பட எதிர்கொள்ள தங்களது சட்ட வல்லுநர்கள் குழுவை பலப்படுத்தி கொண்டே வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக தற்போது கூட ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு
கடந்த ஜூன் 20ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம். எல். ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. இவருக்கு எதிராக ஜூன் 23ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனடியாக கைது செய்யப்படாமல் BNSS பிரிவு 35(3), (CrPC 41A) கீழ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.


போலீசார் நோட்டீஸ் – ஜூலை 3 அதிரடி கைது
இதையடுத்து போலீசார் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். ஆனால் அதுதொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூலை 3, 2026) காலை அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மு. க. ஸ்டாலின் முதல் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் எனப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த அச்சுறுத்தலுக்கு திமுக பயந்துவிடாது எனக் குறிப்பிட்டனர்.

தவெக எம். எல். ஏவை விட்டு வைத்தது ஏன்? மு. க. ஸ்டாலின் கண்டனம்
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், இந்த கைது நடவடிக்கை மூலம் மக்களை திசை திருப்ப பார்க்கிறது அரசு. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம். எல். ஏ மீதான புகாரில் ஏன் அவசரம் காட்டவில்லை எனக் கேள்வி எழுப்பினார். அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், தற்போதைய அமைச்சர்கள் தினசரி எப்படி பேசுகின்றனர். அதற்கெல்லாம் எத்தனை பேரை கைது செய்வது என்று சரமாரியாக சாடினார். இந்த சூழலில் போலீசார் நாள் முழுவதும் அலைக்கழித்து இரவு 10 மணிக்கு மேல் மேஜிஸ்டிரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

மேஜிஸ்டிரேட் வீட்டில் நள்ளிரவில் திமுக வாதம்
அப்போது திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு ஏற்ப நேரில் ஆஜரானார். கைது நடவடிக்கையிலும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் படி, 41A நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த உத்தரவின் கீழ் நடந்து கொண்ட ஒருவரை போலீசார் கைது செய்ய முடியாது.
கைது நடவடிக்கை ஏன் அவசியம் என்று எழுத்துப்பூர்வமாக போலீசார் காரணங்களை முன்வைக்காத வரை குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய முடியாது என்று திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
சுமார் 2 மணி நேரம் தொடர்ச்சியான வாதத்தை தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மேஜிஸ்டிரேட் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

error: Content is protected !!