எம்.ஆர்.பி.க்கு மேல் மதுபானம் விற்றால் பணிநீக்கம் வரை நடவடிக்கை – மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்,
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக, காலை 10 மணிக்கு முன்பும், மதியம் 12 மணிக்குள் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த முறைகேட்டை அரசு பொறுப்பேற்றவுடன் உடனடியாக கட்டுப்படுத்தியுள்ளோம்.
அதேபோல், எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானால், அடுத்த நாளே சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, தவறு செய்தவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஊதியம் உயர்த்தப்பட்டால், இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபட வேண்டிய சூழல் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மதுபான பெட்டிகளை இறக்கும் பணிக்காக தனியாக செலவழிக்க வேண்டியிருப்பது, மின்சார கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் ஊழியர்கள் அரசிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, பெட்டிகளை இறக்கும் பணிக்கு போக்குவரத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்திற்கு தனி நடைமுறையும் விரைவில் அமல்படுத்தப்படும். வாடகை தொடர்பான பிரச்சினைகளும் ஆய்வு செய்து தீர்க்கப்படும்.
இதுவரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு அதிகபட்சமாக ரூ.500, ரூ.750 அல்லது சில காலங்களில் ரூ.2,000 மட்டுமே இருந்தது. ஆனால், இந்த முறை முதலமைச்சர் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து 25 சதவீத ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி
உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340 ல் இருந்து ரூ.17,925 ஆக உயர்த்தப்படுகிறது.
விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530 ல் இருந்து ரூ.19,413 ஆக உயர்த்தப்படுகிறது.
மேற்பார்வையாளர்களின் (Supervisor) ஊதியம் ரூ.17,850 ல் இருந்து ரூ.22,313 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த 25 சதவீத ஊதிய உயர்வின் மூலம் ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயர்கிறது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊழியர்களின் இ.எஸ்.ஐ. (ESI) மருத்துவக் காப்பீட்டு கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது. இனிமேல் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்கப்படும்.
இந்த சலுகைகள் அனைத்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், இனி எம்.ஆர்.பி.க்கு மேல் மதுபானம் விற்பனை செய்ய எந்த காரணமும் இருக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும்.
முன்னதாக கூடுதல் தொகை வசூலித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இடைநீக்கம் செய்யப்படுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களுக்கு ஊழியர்களும் முக்கியம், நுகர்வோர்களின் பணமும் அதே அளவு முக்கியம். நுகர்வோரின் பணம் வேறு யாரிடமும் செல்லக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
மதுபான விலை உயராது
ஊதிய உயர்வால் மதுபானங்களின் விலை உயருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசின் நோக்கம் விலையை உயர்த்தி வருவாயை அதிகரிப்பது அல்ல. டாஸ்மாக் துறையை சீரமைப்பதே நோக்கம். எனவே, ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது என்றார்.
ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எம்.ஆர்.பி.க்கு மேல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 30 முதல் 40 பேருக்கு மேல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன் இந்த பிரச்சினையை முடிப்பதாக கூறிய நிலையில் இன்னும் பல இடங்களில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது, ஊழியர்கள் தரப்பில் இருந்த பிரச்சினைகளை முதலில் தீர்த்து வருகிறோம். அதன் பிறகு இந்த நடைமுறை தொடர முடியாத சூழல் உருவாக்கப்படும் என்றார்.
மேலும், இந்த பொறுப்பு கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மேலாளர் நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
10 ரூபாய் வசூலிப்பதை அரசு ஏற்க முடியாது
கூடுதல் ரூ.10 வசூலிப்பதால் கிடைக்கும் வருமானத்தை ஈடுகட்டும் வகையில் ஊதிய உயர்வு போதுமா என்ற கேள்விக்கு, ரூ.10 வசூலிக்கிறீர்கள் என்பதற்காக அதையே அரசே ஊதியமாக வழங்க முடியாது. அரசுக்கு ஊதிய நிர்ணய நடைமுறை உள்ளது. அதன்படியே ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றார்.
டாஸ்மாக் பார் டெண்டர் 2 மாதங்கள் நீட்டிப்பு
டாஸ்மாக் பார் டெண்டர் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய பொதுத் டெண்டர் நடைமுறைக்கு 4 முதல் 5 வாரங்கள் தேவைப்படுவதால் இந்த இடைக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
மறுவாழ்வு மையங்கள் வலுப்படுத்தப்படும்
மதுப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், கோயம்புத்தூரில் உள்ள மறுவாழ்வு மையத்தை நேரில் ஆய்வு செய்ததாகவும், பழைய ஆட்சிகளைப் போல விழிப்புணர்வு ஊர்வலங்கள் மட்டும் நடத்துவது போதாது என்றும் கூறினார்.
மறுவாழ்வு மையங்கள் எவ்வளவு பயன் அளிக்கின்றன என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப புதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
21 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை
எஃப்.எல்.3 (FL3) உரிமம் பெற்ற பப் உள்ளிட்ட இடங்களில் 21 வயதுக்கு குறைவானவர்களை அனுமதித்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புதிய FL2 உரிமங்கள் வழங்கப்படவில்லை
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய எஃப்.எல்.2 (FL2) உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது இயங்கி வரும் அனைத்து உரிமங்களும் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டவை என்றார்.
காலை நேர சட்டவிரோத விற்பனை இல்லை
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டபோது, எங்களிடம் வரும் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் அப்படி எங்கும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்தில் உள்ளவர்களை உடனடியாக மாற்ற முடியாது. அதற்காக மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சரின் அறிவுறுத்தல் என்றார்.
முதலில் டாஸ்மாக் துறையை முழுமையாக சீரமைப்பதே எங்களின் முன்னுரிமை. ஒரு பணியை முழுமையாக முடித்த பிறகே அடுத்த நடவடிக்கைகளுக்கு செல்வோம். துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
