புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை அகற்றுவதற்காக வந்த ரெக்கவரி வேன் உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அருகில் இருந்த வயலுக்குள் பாய்ந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தேவராஜ் பழுதான வாகனத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாகப் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த அரசுப் பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த தேவராஜ் மீது அதிவேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த தேவராஜ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தேவராஜ் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. பேருந்து வயலுக்குள் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் தேவராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
