Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) மதியம் 1 மணியளவில், வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவொக் தீவிற்கு அருகே உள்ள ‘ஹான் மே ரட் நிகோய்’ தீவிலிருந்து ‘அன் தோய் துறைமுகத்தை நோக்கி அதிவேக சுற்றுலாப் படகில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

துறைமுகத்திற்கு 500 மீட்டர் தொலைவே இருந்தபோது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று மோதியதில், நிலைதடுமாறிய படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 15 இந்தியப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் ‘லாவா’ செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறந்த முறையில் வணிகம் செய்ததற்காக, அவர்களது பணியைப் பாராட்டி, நிறுவனம் சார்பாக இந்த இலவச வியட்நாம் சுற்றுலாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களில் தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாபு, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினர் வற்புறுத்தியும், நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில் இந்தச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்ட சோகக் கதைகளும் தற்போது வெளியாகியுள்ளன.

விபத்து நடந்தவுடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் வியட்நாம் தூதரகத்துடன் அவசரத் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

வியட்நாமில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பிறகு, 15 இந்தியர்களின் உடல்களும் நேற்றிரவு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் முதலில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டன.அங்கிருந்து அந்தந்த மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்களும் இன்று காலை சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

error: Content is protected !!