முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். ‘ஆல்-ரவுண்டரான’ கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.
கடைசியாக, 1974ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய இவர், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் (1973, எதிர்: இங்கிலாந்து, லீட்ஸ்) பங்கேற்றார்.
முதல் தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடிய இவர், 6 பந்தில், 6 சிக்சர் (1968, எதிர்: கிளாமார்கன்) விளாசிய முதல் வீரரானார்.
மொத்தம் 93 டெஸ்ட் (8032 ரன், 26 சதம், 235 விக்கெட்), ஒரு ஒருநாள் போட்டியில் (1 விக்கெட்) விளையாடினார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார். இதனை, அவரது மகன் டேனியல் உறுதி செய்தார்.
கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசுரத்தனம் காட்டியவர் சோபர்ஸ். 1954 முதல் 1974 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய இவர், படைத்த சாதனைகள் ஏராளம்.
93 போட்டிகளில் விளையாடி 8,032 ரன்கள் குவித்துள்ளார் (சராசரி: 57.78). இதில் 26 சதங்கள் அடங்கும்.
இடதுகை வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என இரண்டிலும் மிரட்டிய இவர், 235 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் இவரே.
‘அவர் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; கிரிக்கெட் என்ற விளையாட்டின் இலக்கணம்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர்.
அவரது அசாத்திய திறமையைப் பாராட்டி, பிரிட்டன் ராணி எலிசபெத் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தார். சோபர்ஸின் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் ( ஐசிசி) இரங்கல் தெரிவித்துள்ளது.
