Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

மேகதாது விவகாரம்-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

சென்னை விமான நிலையத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 22 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, “நீட் தேர்வு இருக்கக் கூடாது” என்பதே பாமகவின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வு சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும், தமிழகத்திற்கும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கும் எதிரானது. மேலும், இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது முழுமையாக வணிகமயமாக்கப்பட்ட தேர்வாக மாறிவிட்டது. தகுதியான மாணவர்கள் பாதிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆண்டுதோறும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அவை மிகப் பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இத்தகைய தோல்வியடைந்த தேர்வு முறையை தொடர்ந்து நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, மத்திய அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேர்வை நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும்.

மாணவர்கள் தொடர்பான பிரச்சினை என்பதால், போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். அதே நேரத்தில், அரசும் பொறுமையுடனும், பொறுப்புடனும் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையாகும். மேகதாது அணை கட்டுமானத்தை எந்தச் சூழலிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் ஒருமித்த குரலில் இதற்கு எதிராக செயல்பட வேண்டும்.

மேகதாது அணைக்கு எதிராக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தவும் பாமக தயாராக உள்ளது. தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அரசியல் மற்றும் சட்டரீதியான அழுத்தத்தை வழங்க வேண்டும். மேகதாது தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை என்றார்.

தற்போது போதிய மழை பெய்யாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை சுமார் 65 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதுடன், ‘சூப்பர் எல் நினோ’ தாக்கமும் நிலவுவதாக கூறப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும், சிறு மற்றும் குறு விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் சுமையால் நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளின் உயிரைக் காப்பாற்ற கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதே ஒரே தீர்வாகும்.

அரசியல் விமர்சனங்கள் கொள்கை மற்றும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆக்கபூர்வமான, வளர்ச்சியை நோக்கிய அரசியலே ஜனநாயகத்திற்கு நல்லது. முதலமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், எந்த அரசியல் தலைவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நாகரிக அரசியலுக்கு ஏற்றதல்ல. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் அவை கொள்கை அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

error: Content is protected !!