இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து தொழிலாளர் கட்சி தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆன்டி பர்ன்ஹாம்(56) மட்டுமே போட்டியிட்டதால், அவர் முறைப்படி தொழிலாளர் கட்சி தலைவராக கடந்த வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கெய்ர் ஸ்டார்மர் நேற்று மன்னர் 3ம் சார்லசை சந்தித்து முறைப்படி தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி ஏற்று கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7 வது பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவும் ஐக்கிய ராச்சியமும் பொதுவான ஜனநாயக விழுமியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன.
மேலும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் பரந்த அளவிலான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்த மாதம் CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதால், நமது இருதரப்புக் கூட்டாண்மை மேலும் வலுப்பெற உள்ளது. இந்தியா-ஐக்கிய ராச்சிய விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், நமது பொதுவான விஷன் 2035-ஐ முன்னெடுத்துச் செல்லவும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
