கரூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் அச்சம்… மாணவர்களை கைகோர்த்து அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள்: காலை, மாலை என இரண்டு வேளையிலும் காவலர்களை நியமிக்க கோரிக்கை.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட தாளப்பட்டி மாச்சண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்தப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில்

பெரும்பாலானோர் நெடுஞ்சாலையின் மறுபுறம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பதால், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கனரக லாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால், மாணவர்களின் பாதுகாப்பு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால்,பள்ளி ஆசிரியர்களே தங்களது பணிக்கு அப்பாற்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களை பாதுகாப்பாக சாலையைக் கடக்கச் செய்து வருகின்றனர்.
ஆனால் ஆசிரியர்கள் விடுப்பில் இருக்கும் நாட்களிலும், பள்ளியில் ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் நேரங்களிலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பெரும் சிரமமாக

இருப்பதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் இடைவிடாமல் செல்வதால், ஆசிரியர்களுக்கே சாலையைக் கடக்க அச்சம் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் பதற்றத்துடனேயே மாணவர்களை அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எந்த நேரத்திலும் ஒரு சிறிய கவனக்குறைவு பெரிய விபத்தாக மாறக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அரவக்குறிச்சி காவல் நிலைய ரோந்து வாகனம் அப்பகுதியில் பணியில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவி செய்ததாகவும், ஆனால் கடந்த சில காலமாக அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதால் மீண்டும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பள்ளி பகுதியைக் குறிப்பதற்கான எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் அறிவிப்புப் பலகைகள், வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்பை மீண்டும் ஏற்படுத்துவதோடு, தேசிய நெடுஞ்சாலையில் உடனடி பாதுகாப்பு வசதிகளை அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
