திருச்சியை அடுத்த சமயபுரம் இனாம் சமயபுரம் பகுதியில் அய்யாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பூசாரியாக சமயபுரம் கீழரத வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். இவர் பிற்பகல் 2 மணி அளவில் கோவிலை பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் இரவு மீண்டும் கோவிலுக்கு சென்றார். கோவிலின் வெளி கதவு பூட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது. கருவறையில் வைக்கப்பட்டிருந்த,
நான்கு பித்தளை குத்து விளக்குகள் மற்றும் அம்மன் முகத்தில் இருந்த பித்தளை கவசம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது பற்றி சுரேஷ்குமார் சமயபுரம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில்
மேற்கண்ட கோவிலில் கைவரிசை காட்டியது மணச்சநல்லூர் புறத்தாக்குடி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த அருளானந்த் (26) என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருட்டுப் போன குத்து விளக்கு மற்றும் அம்மன் முகக் கவசம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
