கரூர் அருகே கரூர் – ஈரோடு மார்க்கத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம் முதல் நொய்யல் வரையுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய இரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஏற்கனவே உள்ள இரயில்வே பாதையின் தென்புறமாக புதிய பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும் எனக் கூறி அப்பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கரூர்

மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு முன்புறம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாயிற் கதவை மூடினர். போலீசாரின் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாற்று வழியில் வந்த முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.வடிவேல் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.
மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் மனுக்களை பெற்றுக் கொண்டு திட்டத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம் என கூறி அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மனு அளிக்கச் சென்றவர்கள், மாவட்ட கலெக்டர் சொன்ன பதிலை கிராம மக்களிடம் தெரிவித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர். கிராம மக்களின் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
