சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தை இறுதிச் சடங்கிற்காகத் திறந்து பார்த்தபோது, அது வேறு பெண்ணின் உடலே என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி (18) மற்றும் அனுஷ்கா (19) ஆகிய இரு இளம் பெண்களின் சடலங்கள் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தன. பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும், ஊழியர்களின் கவனக்குறைவால் பிரியதர்ஷினியின் (18) சடலத்திற்குப் பதிலாக அனுஷ்கா (19) என்பவரின் சடலம் உறவினர்களிடம் மாற்றித் தரப்பட்டது. சடலத்தைப் பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய முயன்ற போதுதான், அது பிரியதர்ஷினி இல்லை என்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக மருத்துவமனைக்குத் திரும்பிய அவர்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுஷ்காவின் சடலத்தைப் பெற்றுக்கொண்ட ஊழியர்கள், பிரியதர்ஷினியின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
