கரூரில் கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்.
கரூர், கருப்பம்பாளையம் பிரிவு அருகே, சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர் அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கரூரைச் சேர்ந்த ஜோதிமணி (40) மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி (56) ஆகிய இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்துலிங்கம் (65) என்பவர் காயமடைந்தார் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
உயிரிழந்த வசந்தியின் கணவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்.
மேலும் மூன்று பேரும் உறவினர்கள் எனவும் கரூரில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பம்பாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
