காரைக்குடி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பேரன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் கணேசன் (16). இவருக்கு குதிரை வண்டி பந்தயத்தில் ஆர்வம் அதிகம். பல்வேறு இடங்களில் நடைபெற்ற குதிரை வண்டி போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, லாவகமாக குதிரையை செலுத்தி பரிசுகளை குவித்து வந்தார். தென் மாவட்டங்களில் குதிரை பந்தயம் எங்கு நடந்தாலும் கணேசன் தனது குதிரை மற்றும் வண்டியை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உதவியாளர்களுடன் சென்று பங்கேற்று திரும்புவது வழக்கம். இவர் தனது குதிரை பந்தய வீடியோக்களை இன்ஸ்டா., உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானார்.
இந்நிலையில், சிவகங்கை அருகே நேற்று நடைபெற்ற குதிரை பந்தயத்தில் கணேசன் தனது கலந்து கொண்டார். மாலை 5 மணியளவில் அங்கிருந்து சரக்கு வேனில் தனது குதிரை, உதவியாளர்களுடன் புறப்பட்டு காரைக்குடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். கல்லல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் கணேசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த மற்றவர்களும், குதிரையும் சிறிய காயங்களுடன் தப்பினர். இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
