தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
1892ல் மைசூர் மாநிலம் 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்தது. அப்போது தமிழ்நாடு 30 லட்சம் ஏக்கரில் 3 போகம் நெல் சாகுபடி செய்தது. பின்னர் 1924 ல் மைசூர் மாநிலம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 25 லட்சம் ஏக்கராக சுருங்கியது.
பின்னர் 1974 க்கு பிறகு கர்நாடகா மற்றும் தமிழக அரசியல்வாதிகள் சேர்ந்து கர்நாடகாவில் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம் என ஐந்து அணைகளை கட்டினர் இதனால் தற்போது கர்நாடகத்தில் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 7 லட்சம் ஏக்கரில் மட்டுமே ஒரு போகம் சாகுபடி செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம்
ஜனவரி முதல் மே வரை 12.75 டிஎம்சி தண்ணீரும், ஜூன் மாதம் 9. 19 டி எம் சி தண்ணீரும், ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீரும் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டும், இன்று வரை கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது.
53 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்திருக்கலாம் இதனால் தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தண்ணீர் திறக்காததால் ரூ.1லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த பணத்தை வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்து விவசாயிகளை காப்பாற்றுங்கள். ஊழலில் இருந்து தப்பிப்பதற்காக ஊழல் அரசியல்வாதிகள் கர்நாடகாவில் அணைகட்ட அனுமதி கொடுத்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தார்கள். ஆகவே உயிரை கொடுத்தாவது மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தடுக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
