கேரளாவில் தொடர்ந்து கனமழை அதிகரித்துள்ள நிலையில், இன்று 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கேரளத்தில் பெய்துள்ள இந்தப் பருவமழை காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக இந்த மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளான குட்டநாடு, கோட்டயத்தின் பாலா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ராணி மற்றும் கோன்னி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் மத்திய கேரளப் பகுதிகளான பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி காசர்கோடு என 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்காணித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி, பம்பை மற்றும் மணிமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் சற்று வடியத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தின் ராணி மற்றும் ஆரண்முளா பகுதிகளுக்கு இன்று கேரள முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் உள்ளார்.
