Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது- 150 கிலோ பறிமுதல்

கஞ்சா கடத்திய 3வாலிபர்கள் சிறையில் அடைப்பு-150 கிலோ பறிமுதல்

 குன்றத்தூர் அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து சொகுசு கார் ஒன்றில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் தாம்பரம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார், குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மீன் மார்க்கெட் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி, டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், காரின் உள்ளே சோதனை செய்தபோது, அதில் சிறுசிறு பொட்டலங்களாக சுமார் 55.700 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர்.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தற்போது ஒடிசாவில் வசித்து வரும் வெங்கட சுப்பிரமணியன் (எ) மணியன் (37), திரிசூலம் அம்மன் நகர் 4வது தெருவை சேர்ந்த சுமன் (27) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், வீரமங்களம் வடக்கு தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (எ) பட்லூ (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒடிசாவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்தால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்று கருதி, மூட்டை மூட்டையாக கஞ்சாவை கொண்டு வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

அத்துடன், 7 பார்சல்களில் கஞ்சாவை இந்தியன் போஸ்ட் மூலம் ஒடிசாவில் இருந்து பல்லாவரம் தபால் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறினர். மேலும், அவற்றில் கஞ்சா வாசனை தெரியாமல் இருப்பதற்காக பார்சல் மீது மஞ்சள் பொடியை தூவி அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. விரைந்து சென்ற போலீசார், பல்லாவரம் தபால் நிலையத்தில் பார்சலோடு பார்சலாக இருந்த 100.640 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஒரே நேரத்தில் 156.340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை புறநகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!