கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், நில உரிமையாளர் மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தன.
கள்ளக்குறிச்சி அருகே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக வெளிநிலங்களில் இருந்த தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை மின்வாரிய அதிகாரிகள் வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.
துரசலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் தங்களது நிலத்தில் மா, தேக்கு, தென்னை உள்ளிட்ட மரங்களை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல், போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த நில உரிமையாளர் செல்வி, மரத்தை கட்டிப்பிடித்தபடி கதறி அழுதார். குழந்தையைப் போல் வளர்த்த மரங்களை உரிய இழப்பீடு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் வெட்டி விட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியின்போது மாற்று வழியில் மின்கோபுரங்களை அமைப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததாகவும், தற்போது தங்களது எதிர்ப்பையும் மீறி மரங்களை வெட்டி சாய்த்துள்ளதாகவும் செல்வி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து செல்வி கூறுகையில், “எங்களுடைய வாழ்வாதாரமே விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது. எங்கள் நிலத்தில் கிணறு உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில், இதுபோன்று மின்கோபுரம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கின்றனர். முதலில் ‘ட்ரயலுக்காக போட்டோ எடுத்துவிட்டு போய்விடுவோம்’ என்று கூறினர். பின்னர், ‘டவர் போடக்கூடாது’ என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து அதிகாரிகள் சென்றுவிட்டனர்.
நாங்கள் சேலத்திற்கு சென்றிருந்த நேரத்தில், எங்களுக்குத் தெரியாமல் டவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் திரும்பி வந்து பார்த்தபோது, மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. இதற்கு யாரும் உரிய விளக்கம் அளிக்கவில்லை” என்றார்.
மரங்களை வெட்டுவதற்கு செல்வியும் அவரது மகன் பாலமுருகனும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மரங்களை பல ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில், அவை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
